"இலங்கை, பாகிஸ்தானை காட்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக கூறியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி ஏழைகளுக்குச் சுமையை ஏற்படுத்தாது என்று விளக்கமளித்துள்ளார்.
விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர், மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு சீனா விதித்த தடை போன்ற சூழலிலும் நாட்டின் பணவீக்கம் 7 சதவீதத்திற்குள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
மத்திய அரசு, ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளால் பணவீக்கம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பொருளாதாரப் பிரச்சனைகளில் இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சிக்கியுள்ள நிலையில், அன்னிய செலாவணி கையிருப்பு இந்தியாவை பாதுகாப்பதாகத் தெரிவித்தார்.
பால் மற்றும் இதர பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறித்து விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன், அனைத்து மாநிலங்களின் ஒருமித்த கருத்துடன் ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அரிசி, கோதுமை, பருப்பு, தயிர் போன்றவற்றுக்கு சில்லரை விற்பனையில் ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை என்றும், உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி ஏழைகளுக்குச் சுமையை ஏற்படுத்தாது என்றும் அவர் கூறினார்.
நிர்மலா சீதாராமனின் பதிலுரையைப் புறக்கணித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, மாநிலங்களவையில் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் இன்று நடைபெறுகிறது.
Comments